கண்ணில் தூவ கற்ற கைமண்

ஜெமோ'வின் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் படித்தேன். நல்ல அறிமுகம்.

'நல்ல அறிமுகம்' என்று சான்றிதழ் வழங்குவது, அந்நூலை மட்டுமே படித்தவன் செய்யக்கூடியதில்லை. அறிமுக நூலுக்கு அவசியமாகிற சுருக்குதல்/எளிமைப்படுத்துதல்களால், சாரம் பாதிக்கப்பட்டுவிடவில்லை என்று சொல்ல அத்துறையை ஓரளவு நன்கறிந்தவர்களால் தான் முடியும். தகுதியெல்லாம் பார்த்தால் வலையுலகில் தொழில் பண்ண முடியுமா. என் சான்றிதழும் ஒரு மூலையில் இருந்துவிட்டு போகட்டுமே.




என்னளவில் கொஞ்சம் புகை மூட்டம் விலகியதாகவே உணர்கிறேன். கச்சாமுச்சாவென்று தகவல்கள், எது-எதற்கு எதிர்வினையாக வளர்ந்தது, சரித்திர ஓட்டத்தில் ஒரு தத்துவத்தின் இடம் என்ன, நீட்சி என்ன, போன்றவை எல்லாம் தெரியாமல் ஒரு விதக் கலவையாக நம்முன் வந்து விழுவதை கொஞ்சம் தெளிவுபடுத்திக்கொள்ள உதவும் இந்நூல்.

வில் ட்யுரண்டின் 'த ஸ்டோரி அஃப் ஃபிலாஸஃபி' என்ற பிரபலமான நூலைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது செய்வது இதைத் தான்: தத்துவங்களையும், தத்துவாசிரியர்களையும் சரியான context வரிசையில் விளக்குகிறது. எதிலிருந்து எது வளர்ந்தது, எதோடு எது முரண் பட்டது என்று தெரிந்து கொள்ள உதவும். அது போல - அத்தனை ஆழமாக இல்லாவிட்டாலும் - இந்திய தத்துவத்துக்கு ஒரு அறிமுகம் கிடைத்தால் பரவாயில்லை என்று தோன்றியது. ஜெமோவின் விருப்பமான சொற்றொடர்ப்படி: "அறிவு என்பது தகவல்களை பகுத்து பின் சீராக தொகுத்து அடுக்கிக் கொள்வது" தானே.

இந்திய தத்துவங்களைப் பற்றி வேதாந்தம், யோகம், மீமாம்சம் என்று சொற்கள் பறப்பதை பார்த்து மிரண்டிருக்கிறேன்(றோம்...துணைக்கு வந்தால்தான் என்னவாம்) . 'ஹோல்டேன்...எதுஎது, எதுஎது முதல்ல சொல்லுங்கப்பா' என்று கத்தவேண்டும் போல நம்மில் பலருக்குத் தோன்றியிருக்கும். தேவி பிரசாத் சட்டோபாத்யாயின் 'இந்திய சிந்தனையில் நிலைத்திருப்பவையும் அழிந்தவையும்' என்ற தலைகாணியுடன் ஒரு மோது மோதிப்பார்த்து 'நெஸ்ட் மீட் பண்ணுவோம்' என்று விட்டுவிட்டேன். ஒருமுறை Encyclopedia of Brittanicaவின் எஸ்.சி.சாட்டர்ஜி (?) எழுதிய கட்டுரைகளை எடுத்து வைத்துக்கொண்டு, படங்களெல்லாம் வரைந்து புரிந்துகொள்ள முற்பட்டேன். வேலைக்காகவில்லை.

ஜெயமோகனின் எழுத்து நுட்பமான விஷயங்களை மிகத்தெளிவாக விளக்கும் விதமாக இருக்கிறது. 'இவ்விடம் சிடுக்கு, கவனமாக படிக்கவும்' என்று பலகை வைக்காத குறையாக பல இடங்களை மிகுந்த பிரக்ஞையையோடு தெளிவாக்கி இருக்கிறார். எதை ஆராய முற்படுகிறோம், அதை எவ்வாறெல்லாம் ஒரு தத்துவம் விளக்க முற்படுகிறது, அதன் கலைச்சொற்கள் (அந்த contextஇல் அவற்றுக்கு உள்ள பிரத்யேக அர்த்தங்கள்), இடரல்கள்..என்று தத்துவ நூல் வாசித்துப் பழக்கமில்லாதவர்கள் (என்னைப் போன்றவர்கள்) கூட படிக்கமுடியும்படி இருந்தது. இவ்விஷயங்களில் ஆர்வம் இருந்து, கரையோரத்தில் மிரண்டு நிற்கும் சகாக்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.

கொஞ்ச நாட்களாகவே சந்தையில் இல்லாமல் இருந்ததை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார்கள்.

இனி கழிவிரக்கப் படலம்

"ட்யுராண்ட என்று பெயருதிர்த்தாயே படவா, அந்த லட்சணத்தைப் பார்ப்போம்: 'இப்போது ஷோபென்ஹௌவரும்-ஹெகெலும் இனின்ன விஷயங்களை இவ்விவ்வாறு முரண்பட்டார்கள் என்று 100 வார்த்தைகள் மிகாமல் எழுது'" என்று சொன்னால் அசடு வழிவேன். இன்னும் சில மாதங்கள் கழித்து 'வைசேஷிகத்தின் அணுக்கொள்கையில் உள்ள முரண் ,என்று சங்கரர் எதைக் கூறினார்?'' என்று கேட்டாலும் இதே கதி தான் என்று தெரியும். தகவற்பட்டியலில் ஒன்றிரண்டை மறப்பதைக் கூறவில்லை, அது ஜகஜம். முக்கியமான சாராம்சக் கருத்துக்களைக் கூறுகிறேன்.

ஒரு விஷயத்தைப் பற்றி தொடர்ந்து படிக்காமல் 'இங்கெ கொஞ்சம் பிளிச்சு, அங்கெ கொஞ்சம் பிளிச்சு' என்பதால் வரும் வினை இது. என்ன செய்ய, எதைப் படிக்கும்போதும் படிக்காதவை இன்னும் இவ்வளவு இருக்கிறதே என்ற நினைப்பு தான். (இதிலிருந்து 'வாழும்போதே வாழ்வனுபவங்களுக்கு ஏங்குவது' என்று கவித்துவமான இணைக்கோடு ஒன்றைப் பிடித்து லயிக்கவேண்டியது வாசகர் கடன்). பிடிப்பதே கைமண் தான். அதுவும் விரலிடுக்கில் வழிந்தோடினால் என்ன செய்வது? எண்ணை தேய்த்து மண்ணில் புரண்டாலும் ஒட்டுகிற மண் தான் ஒட்டும் என்று இதை விட்டுவிட முடியுமா? (அடடா, மண்ணில்தான் எத்தனை மெட்டஃபர்கள்! மண்ணாங்கட்டி...மேல சொல்லு).

குறிப்புகள் வேண்டும். அவற்றைப் படித்த நிமிடத்தில் வாசக அனுபவத்தின் ஞாபகங்கள் கிட்டத்தட்ட திரும்ப வேண்டும். என்ன செய்யலாம்? வெண்பா இலக்கணத்துக்கப்புறம் வில்லியம் ஷேக்ஸ்பியருக்குத் தாவ வேண்டிய நிர்பந்தம் வந்தால், மாமுன் நிரை..என்று வாய்பாட்டை கஜினிபோல நெஞ்சில் பச்சைகுத்திக்கொள்ளவேண்டியது தான். பார்த்ததும் சட்டென்று நியாபகப்படுத்திக்கொண்டுவிடலாம். அது போல ஆறு தரிசனங்கள் பற்றிய குறிப்புகளையும் தலா ஒன்றென சிக்ஸ் பேக்கில் (விடு விடு) எழுதிக்கொள்ளலாம்.

மேற்சொன்னதும் உருவகம் ஐயா: பேசாட்டு படிக்க படிக்க இந்த ப்ளாகில் இறக்கி வைத்து விட வேண்டியது (வலைத்தளத்தை உடலின் நீட்சியாக பார்ப்பதன் உடலரசியல் அவதானத்துக்குரியது). என்ன ஒரு பிரச்சினை, படித்ததற்கும், தங்கியதற்கும் நடுவே உள்ள பயணச்செலவு முதற்கொண்டு உலகறிய இருந்துத் தொலைக்கும். போவுது போ.

இன்னொரு பிரச்சினை, உள்ளுக்குள்ளேயே வைத்து marinate ஆக விடாமல் இங்கே கொட்டிக்கொண்டிருந்தால் நானெல்லாம் எப்போது நாவல் எழுதுவதாம்? அதுசரி, அதைப்பத்தி உங்களுக்கென்ன கவலை. It's between me and தமிழ்த்தாய்.

Comments

  1. இந்த கவலைக்கு தீர்வு தான் என்ன? எல்லாருக்கும் எல்லாம் படிக்கணும்நு ஆசை இருக்க தான் செய்யுது. நானும் higginbothams போரபோதேல்லாம் ஒரு பத்து புத்தகம் அள்ளிண்டு வந்துடுறேன். ஆன படிக்க தான் நேரம் இல்ல( loss of drive ku மறு பெயர்).
    அந்த விஷயத்துல உங்களெல்லாம் பாத்தா பொறாமையா தான் இருக்கு.
    ஜெயமோகன் வலைபதிவுகள சில சமயம் படிச்சதுண்டு. சுஜாதா, இன்ற சௌந்தரராஜன் படிக்கரவனுக்கு ஜெமோ ரொம்ப ஆழம் தான். சில சமயம் தாக்கத்துலேந்து வெளி வர ரெண்டு மூணு நாள் ஆகுது.

    ReplyDelete
  2. நல்ல பதிவு. உங்கள் நிலை தான் எனக்கும் என்பதால் நீங்கள் பிழைத்தீர்கள். இல்லை என்றால் தத்துவங்களை விளக்க கிளம்பியிருப்பேன்.

    இந்த புத்தகத்தை இரண்டு முறை படித்துவிட்டேன். ஒவ்வொரு தடவையும் புரிந்தது போல் இருக்கிறது. அனால் புத்தகத்தை முடியவுடன் மறந்து விடுகிறது. அப்பொழுது தான் மாயை என்றால் என்ன என்பது புரிந்தது. இந்த புத்தகத்தை மனப்பாடம் செய்து எல்லோருக்கும் ஒப்பித்துகொண்டிருந்தல் அது தான் பூர்வ மீமாம்சை. தலை கீழே நின்று இதை புரிந்துகொள்ள பார்த்தால் அது தான் யோகம். இப்படியாக நான் புரிந்து கொண்டிருக்கிறேன். மிச்ச தரிசனங்களை இந்த தத்துபித்துவதில் இனிமேல் தான் சேர்க்க வேண்டும். Stephen Hawking எழுதிய 'A Brief History of Time' கூட இந்த 'வரும் ஆனால் வராது' ரகத்தை சேர்ந்தது தான்.

    இன்னொரு அருமையான தத்துவ அறிமுக புத்தகம், Jostein Gaarder இன் 'Sophie's World'. வெகு சுவாரஸ்யமாக கதை போல் வெஸ்டர்ன் தத்துவத்தை சொல்லியிருப்பார். எவ்வளவு சொன்னாலும் என்ன, நாம் கடைசியில் என்னத்த கண்ணையா போல் தான் இருக்கிறோம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Will KamalHassan apologise for Mahanadhi ?

Judex Ergo Sum

Kamal - the writer/director